*🧩தூத்துக்குடி மீண்டும் சென்னையாக மாறுமா ? : பொதுமக்கள், அதிகாரிகள் கவலை*
ஆரஞ்சு மண்டலமாக தற்போது மாறியுள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு அறிவித்துள்ள தளர்வுகளை அறிவிக்க அரசு அதிகாரிகள் தயக்கம் காட்டுவதாக தெரிய வந்துள்ளது.
உலகெங்கிலும் கொரோனா வைரஸ் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. இதன் காரணமாக இந்தியாவிலும் கடந்த மார்ச் 24 ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மேலும் இந்த ஊரடங்கு உத்தரவு வரும் மே 17ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ள நிலையில் ஆரஞ்சு மண்டலங்களில் பல தளர்வுகள் மத்திய, மாநில அரசுகளால் அறிவிக்கப்பட்டுள்ளன. இரண்டாம் கட்ட ஊரடங்கு இன்றுடன் நிறைவு பெறும் நிலையில் நாளை முதல் பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டலங்களில் பேருந்துகள் இயக்கம், கடைகள் திறக்கும் நேரம் அதிகரிப்பு, தொழிற்சாலைகள் குறைந்த தொழிலாளர்களுடன் இயக்கம் என பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது.
ஆனால் தூத்துக்குடி மாவட்டத்தில் இதனை அமல்படுத்த அரசு அதிகாரிகள் கடும் யோசனையில் உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சிவப்பு மண்டலமாக இருந்த தூத்துக்குடி தற்போது தான் ஆரஞ்சு மண்டலமாக மாறியுள்ளதால் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்படும் போது பொதுமக்கள் அதிகமாக பொதுஇடங்களில் கூட வாய்ப்புள்ளது. மேலும் கொரோனா தாக்கம் அதிகமாக பரவும் சென்னையிலிருந்து இ பாஸ் மூலம் விண்ணப்பித்து தூத்துக்குடிக்கு அதிக அளவில் பொதுமக்கள், தொழிலாளர்கள் ,பணியாளர்கள் வருகின்றனர். ஒருவேளை அவர்களுக்கு கொரோனா இருக்கும் பட்சத்தில் தற்போது ஆரஞ்சு மண்டலமாக இருக்கும் தூத்துக்குடி மறுபடியும் சிவப்பு மண்டலமாக அதிக வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் கருதுகின்றனர்.
மேலும் தூத்துக்குடியை சேர்ந்த தொழிலதிபர்கள் சென்னையில் அதிகளவில் உள்ளதால் அவர்களும் தங்கள் பணியாளர்களை தூத்துக்குடிக்கு அனுப்பி வைப்பதாகவும் இது போல் அதிகளவில் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கூடும் போது தூத்துக்குடியில் கொரொனா தொற்று வேகமாக பரவ வாய்ப்புள்ளதாக சுகாதாரதுறையினர் மற்றும் அரசு அதிகாரிகள் கருதுகின்றனர்.
தூத்துக்குடியில் நாளை முதல் அமல்படுத்த உள்ள தளர்வுகள் குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இன்று அறிக்கை வெளியிட உள்ளதாக இருந்த நிலையில் அது ஒத்தி வைக்கப்பட்டு நாளை செய்தியாளர் சந்திப்பில் இது குறித்து ஆட்சியர் அறிவிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மே 17 ம் தேதி வரை தற்போதுள்ள நிலையே நீடிக்க வேண்டும் என்பதே பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், அத்தியாவசிய பணிகள் செய்யும் அரசுத்துறையினரின் எண்ணமாக உள்ளது.
ConversionConversion EmoticonEmoticon